Friday, December 26, 2008
ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்? - What Does Christ Offer to a Muslim?
Posted on 5:35 AM by justdial
ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்?
What Does Christ Offer to a Muslim?
1. கிறிஸ்து தன்னையே தருகிறார், இதன் மூலம் இறைவனிடம் ஒப்புறவாகலாம்
Christ offers Himself, a relationship with Yahweh
இயேசு தன் வாழ்க்கையின் கடைசி கால கட்டத்தில் பரிசேயர்களுக்கு ஒர் உவமையைக் கூறினார்: "பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத் தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான். அந்தத் தோட்டக்காரர் திராட்சத் தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள். அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான். தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?"(லூக்கா 20:9-17).
இது தேவன் தன் பிரியமான மகனை அனுப்பிய ஒரு கதையாகும். தேவன் உங்களை நேசித்து தன் பிரியமான மகனை உங்களுக்காக அனுப்புகின்ற அன்பைக் காட்டிலும் வேறு பெரிய அன்பு இருக்கமுடியுமா? தேவன் தன் மக்களை தன்னிடமாய் இழுக்கும்படி பல தீர்க்கதரிசிகளை(நபிகளை) அனுப்பினார், இருந்தாலும், மக்கள் தேவனுக்கு எதிராகவே நடந்துக்கொண்டனர். மக்கள் தீர்க்கதரிசிகளை அடித்தார்கள், பல வகைகளில் அவமானப்படுத்தினார்கள், இருந்தாலும் தேவனின் பொறுமை மிகவும் சிறந்தது. அப்படியானால், தன் பிரியமான குமாரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் சிலுவையில் அறையப்பட்டார், மறுபடியும் உயிர்த்தெழுந்தார், இன்றும் உங்களுக்காக உயிரோடு இருக்கிறார். அவர் இன்னும் குமாரனாகவே இருக்கிறார். அவர்களிடம்(பரிசேயர்களிடம்) யார் பேசினாலும் உண்மைகள் ஒருபோதும் மனித கற்பனைகளாகாது.
கிறிஸ்து தன்னையே கொடுத்துள்ளார் மற்றும் இவர் மூலம் மட்டுமே நீங்கள் உண்மையாக இறைவனை உணர முடியும். "அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்" (யோவான் 14:9-11).
தேவனோடு நீங்கள் நல்லுறவை பெற இப்போதே மன்றாடலாம், அதாவது இயேசுவை உங்கள் வாழ்க்கையில் வரும் படி அழைத்தால் அதுவே போதும். நாம் பின்பற்றுவதற்கு கிறிஸ்து, சட்டங்கள் அடங்கிய ஒரு சட்டபுத்தகமல்ல, ஆனால், ஒரு மனிதனோடு நட்புறவு கொள்ள அவர் இன்னொரு மனிதனாவார். இயேசு கிறிஸ்துவைத் தவிர, அனைத்து நபிகளும் மரித்தார்கள், அகிலத்தின் அனைத்து பெருமைமிக்க அறிஞர்களும் மரித்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மற்றும் உங்களுக்காகவும் எனக்காகவும் இன்னும் உயிரோடு இருக்கிறார். உண்மையிலேயே இறைவன் மீது உங்களுக்கு வாஞ்சை உள்ளதா? தேவன் உங்களை எவ்வளவு அதிகமாக நேசித்தார் என்றால், அவர் தன் இடத்தை விட்டு உங்களிடம் வந்துவிட்டார். இங்கு ஒரு பிரச்சனையை நீங்கள் கவனிக்கவேண்டும்: இயேசு தேவகுமாரன் என்பதைப் பற்றி குர்ஆன் சொல்வது சரியா அல்லது தவறா? இயேசு எப்படி இருக்கிறார் என்பதை அறிய நற்செய்தி நூல்களை படியுங்கள். அல்லாஹ் எப்படிப்பட்டவர் மற்றும் முஹம்மது எப்படிப்பட்டவர் என்பதை அறிய குர்ஆனை படியுங்கள். இந்த பிரச்சனைப் பற்றிய முடிவை நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கவேண்டிய முடிவை, மற்றவர்கள் உங்களுக்குச் சொல்ல அனுமதியளிக்காதிருங்கள்.
2. கிறிஸ்து உங்களை மன்னிக்கிறார், மற்றவர்களையும் மன்னிக்கிறார்
Christ offers forgiveness for you and forgiveness to others
இயேசு தரும் அனேக பரிசுகளில் "மன்னிப்பு" என்பது ஒன்றாகும். ஒரு முறை தன் சீடர்களோடு அவர் "பஸ்கா பண்டிகையன்று" உணவு உண்கையில், பொதுவாக உள்ள நடைமுறை பழக்கத்தையும் தாண்டி, "நாம் கடைசி இரவு போஜனம்" என்றுச் சொல்லக்கூடிய அன்று ஒரு புதிய நடைமுறையை உண்டாக்கினார். மத்தேயு இதனை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:
"அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்"(மத்தேயு 26:26-29).
இயேசு வானத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு, தன் சீடர்களிடம் கூறினார்:"எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்" (லூக்கா 24:46-48).
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கு அறிவிக்கவேண்டிய இயேசுவின் நற்செய்தி "மனந்திரும்புதலும், பாவத்திற்கு பரிகாரமும்" என்பதைப் பற்றியதாகும். மனந்திரும்புதல் என்பது நாம் இப்போது சென்றுக்கொண்டு இருக்கும் திசையை திருப்பி கிறிஸ்துவிற்குள் தேவனின் திசைக்கு திரும்புவதாகும். மனந்திரும்புதல் என்பதை கட்டாயப்படுத்தியோ, அல்லது ஜிஹாத் மூலமாகவோ கொண்டுவரமுடியாது, மற்றும் இறைவனிடம் நல்லபெயர் வாங்குவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை மனந்திரும்புதல் என்று சொல்லமுடியாது. தேவன் உங்களுடன் ஒரு நல்ல உறவை வைத்துக்கொள்ள விரும்பினார், அதற்காகவே தன் குமாரனை உங்களுக்காக மரிக்க அனுப்பினார். இதன் மூலம் ஒரு புதிய உயிருள்ள உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். இயேசுவின் மரணம் மூலமாக நிச்சயமாக மன்னிப்பும் உண்டு. கிறிஸ்துவிடம் தவிர வேறு எங்கும் இதை விட நல்ல விஷயம் காணவியலாது.
தேவனுடைய மன்னிப்பை நாம் பெற்றோம் என்பதற்காக ஒரு முக்கியமான சான்று உள்ளது, அது என்னவென்றால், "தேவன் உங்களை மன்னித்ததால் நீங்களும் அதே போல மற்றவர்களை மன்னிக்கவேண்டும்". இயேசு கூறினார்: "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" (மத் 6:15). இந்த வசனம், "பழிவாங்க வேண்டும்" என்ற எண்ணைத்தை அடியோடு அகற்றிவிடுகிறது, மற்றும் ஹானர் கில்லிங் என்றுச் சொல்லும் "கவுரவ கொலை- Honour Killing" என்ற கேவலமான பழக்கத்தை அடியோடு தகர்த்திவிடுகிறது. "மன்னிக்கவேண்டும் மற்றும் இரக்கம் காட்டவேண்டும்" என்ற அறைகூவலை இந்த வசனம் நம்முன் வைக்கிறது. "மற்றவர்களை மன்னிக்க முடியாது" என்று நீங்கள் சொன்னால், நிச்சயமாக உங்களை "இறைவன் மன்னிப்பார்" என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. இதர மக்களை மன்னிக்கும் சுபாவம் உங்களுக்கு இருக்குமானால், அதுவே உங்கள் பாவங்களிலிருந்து நீங்கள் மன்னிப்பை அடைந்து தேவன் பக்கமாக திரும்பியிருக்கிறீர்கள் என்பதற்காக முக்கியமான சான்று ஆகும்.
3. கிறிஸ்து முடிவில்லாத நித்திய வாழ்வை தருகிறார்
Christ offers everlasting life
ஏன் ஜிஹாதில் ஈடுபடுகிறார்? இதன் பயன் என்ன? இறைவனுக்காக உயிர்த்தயாகம் செய்வது எதற்காக? இவைகள் எல்லாம் இறைவனின் சொர்க்கத்தை அடைவதற்கான முயற்சிகள் அல்லவா? இயேசு மிகவும் மகிமையான சிறப்பான ஒன்றை தருகிறார். இவர் தன் முன் எப்போதும் வாழ்வதற்கான நித்திய வாழ்வை தருகிறார்.
ஒரு முறை இயேசுவிடம் ஒரு விசித்தரமான கேள்வியை கேட்டார்கள், அதாவது, ஒரு பெண் இருந்தாள் அவள் ஏழு ஆண்களை திருமணம் செய்துக்கொண்டால். முதல் கணவன் மரித்ததும், இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டாள், இப்படி ஏழு பேரை திருமணம் செய்துக் கொண்டாள், கடைசியாக எல்லாரும் மரித்துவிடார்கள். உயிர்த்தெழுதலின் நாளில் அவள் யாருடைய மனைவியாக இருப்பாள் என்பது தான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி:
"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்"(லூக்கா 20:34-36).
சொர்க்கத்தில்/பரலோகத்தில் மோகம் கொண்டு உடலுறவு கொண்டு குடித்து கும்மாளம் போடலாம் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு இயேசு எந்த அடிப்படையும் தரவில்லை. இஸ்லாமியர்களின் பார்வையின் படி சொர்க்கத்தில் 72 பெண்கள் கிடைப்பார்கள் என்பது தான் இஸ்லாமின் உயர்ந்த நிலை. ஆனால், உடலுறவு பசியை திருப்தியாக்குவதைக் காட்டிலும் மேன்மையானதும், இஸ்லாமிய மேன்மையிலும் ஆச்சரியமானதை தருவதைப் பற்றி இயேசு பேசுகிறார். இந்த வெளிப்பாடு தான் நம்மை அவரைப்போல மாற்றும் தன்மை உடையது.
தேவனின் படைப்பின் "குழந்தைகள் பிறப்பு" பற்றிய விவரங்களில் "உடலுறவு" என்பது ஒரு சிறிய பாகமாகும். சொர்க்கத்தில் குழந்தை பிறப்பு என்பது இருக்காது. உவ்வுலகில் மனிதர்கள் முக்கியமாக ஆண்கள், தங்கள் எண்ணங்களை முழுவதுமாக "உடலுறவு" சுற்றியே ஓடவிடுகின்றனர், இதர விஷயங்களுக்கு அவ்வளவு அக்கரை காட்டுவதில்லை. ஆனால், சொர்க்கத்தில் இறைவனின் பிரசன்னத்தில் நாம் இருக்கும் போது, அவ்வாழ்க்கை வெறுப்புள்ள சோர்வு நிறைந்த உயிரில்லாத மகிழ்ச்சியில்லாத வாழ்க்கையாக இருக்காது. இந்த உலகம் நல்லொழுக்கம் தவறிவிட்ட உலகம், இது சீக்கிரமாக கடந்து சென்று விடும். நமக்காக எதிர்காலத்தில் என்ன வைக்கப்பட்டு இருக்கிறது என்று நாம் சிந்தித்தால், நமக்காக புதிய பூமியும், புதிய வானமும் காத்துக்கொண்டு இருக்கிறது, அங்கு இயேசு தானே மகிமையுள்ளவராக இருப்பார். இந்த உலகம் மிகவும் அருமையானது மற்றும் ஆச்சரியமானது என்று நீங்கள் நினைப்பீர்களானால், இதையும் நினைத்துப்பாருங்கள், இவ்வுலகை படைத்த அதே தேவன் தனக்கு முன்பாக நாம் வாழ்வதற்கு நமக்காக ஆயத்தம் செய்த இடம் எவ்வளவு அழகானதாக இருக்கும்.
அப்போஸ்தலர் யோவான் எழுதுகிறார்: "பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 3:2). இயேசுவைப் பற்றி பவுல் கூறுகிறார்: "நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்"(கொலோ3:4).
4. கிறிஸ்து அன்பு நிறைந்த வாழ்க்கையைத் தருகிறார்
Christ offers a life of love
அன்பு என்றால் என்ன என்று நாம் அதன் உண்மை அர்த்தத்தை அறியவேண்டும். பல வேளைகளில் "அன்பு" என்பதை "காதல்,மோகம்" போன்றவற்றோடு தொடர்பு படுத்துகிறோம். கிரேக்க மொழியில் "அன்பு" என்ற வார்த்தைக்கு("Love" என்றுச் சொல்லும் ஆங்கில வார்த்தைக்கு) நான்கு விதமான வார்த்தைகள் உள்ளன. இரோஸ்(Eros) என்பது உடலுறவு என்ற வார்த்தையோடு தொடர்புடைய கிரேக்க வார்த்தையாகும். பிலே(Phileo) என்பது நட்புறவு என்ற வார்த்தையோடு தொடர்புடைய கிரேக்க வார்த்தையாகும்.
இந்த இரண்டு வார்த்தைகள் அவ்வளவு சிறப்பானவைகள் அல்ல, ஏனென்றால், இவைகள் இரு நண்பர்களிடையே அல்லது ஒருவரை ஒருவர் காதலிக்கும் காதலர்களிடையே தானாகவே உருவாகும்.
மூன்றாவதாக, ஸ்டார்ஜ்(Storge) என்பது குடும்ப நபர்களிடையே இயற்கையாக உருவாகும் அன்பாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள், அதே போல பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்களை நேசிக்கிறார்கள் என்று நாம் சொல்லலாம். அகாபே(Agapao) என்பது புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள "அன்பு" என்ற வார்த்தையாகும். இந்த அன்பு மனித வர்க்கம் மீது காட்டப்பட்ட அன்பாகும். இந்த அன்பு, மற்றவர்கள் மீது நம்பிக்கையும், மதிப்பையும் வைக்கும் அன்பாகும். இப்படிப்பட்ட அன்பைத் தான் தேவன் நம்மேல் வைத்துள்ளார். இந்த அகாபே அன்பது இவ்விதமாக விவரிக்கப்படும், "எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை"(1 கொரி 13:3).
இஸ்லாமியர் அல்லாதவர்களைக் கொல்லும் ஜிஹாதிக்களைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள், அவர்களுக்கு மற்றவர்களின் மீது அன்பும் இல்லை, ஜிஹாத் செய்வதினால், அவர்கள் பெற்றுக்கொள்வதும் எதுவுமில்லை.
அன்பு நம்மை உருமாற்றும். தேவனின் அன்பு ஒரு மனிதனை தன் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய உருமாற்றமடைந்த வாழ்க்கையை இயேசுவைப் போல வாழ உதவும்.
"உன் எதிரிகளை நேசியுங்கள்" என்ற வாசகம் உங்களுக்கு முரண்பட்டதாக தோன்றலாம். ஆனால், இயேசு கூறினார்: "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்" (லூக்கா 6:35-36).
மேலே உள்ள வாசகம் சிலருக்கு பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் என்னவென்றால், "உங்கள் எதிரிகளை விரும்புங்கள்" என்று இவ்வசனம் சொல்வதால் தான். நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிப்பதற்கு அவர்கள் உங்களுக்கு விருப்பமானவர்களாக, பிடித்தவர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உன் சத்துருக்களை நேசியுங்கள் என்று சொன்னதின் அர்த்தம் என்னவென்றால், "உங்கள் சத்துருக்கள் கூட மனிதர்கள் தான் என்பதை நாம் முதலாவது உணரவேண்டும்" என்பது தான். அவர்களுக்கும் பொதுவான தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் என்பவைகள் தேவைப்படுகின்றன, எனவே இதனை நாம் உணரவேண்டும். உங்கள் எதிரி ஒரு தேவையில் இருப்பாரானால், உங்களுக்கு அகாபே என்ற அன்பு இருக்குமானால், நீங்கள் கட்டாயமாக அவனுக்கு உதவவேண்டும் என்பதைத் தான் இயேசு இங்கு சொல்கிறார்.
அன்பு உள்ளே வரும் போது பழிவாங்கும் மனப்பான்மை வெளியே சென்றுவிட்டதென்று பொருள். நமக்கு அன்பு இருக்குமானால், இஸ்லாமிய பார்வையின் கோட்பாடுகளாகிய "கவுரவ கொலை என்றும், சமுதாயத்தில் அவமானம் என்றும்" கருதிக்கொண்டு மற்றவர்களை துன்புறுத்தும் பழக்கவழக்கங்களை நாம் ஒதுக்கிவிட்டு, மற்றவர்களிடம் அன்புடன் நட்புறவு கொள்வதாகும் மற்றும் பழிவாங்குதல், வெறுப்பு காட்டுதல் போன்றவற்றை விட்டுவிட்டு நம்மை நாமே மாற்றிக்கொள்வதாகும்.
5. கிறிஸ்து பெண்மணிகளுக்கு கவுரத்தை தருகிறார்
Christ offers status for women
இயேசுவை பின்பற்றியவர்களில் பெண்கள் கூட இருந்தார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. சர்வதேச பைபிள் கலைக்களஞ்சியம்(The International Standard Bible Encyclopedia), நற்செய்தி நூல்களில் காணப்படும் பெண்களைப் பற்றி கீழ் கண்டவிதமாக கூறுகிறது:
"ஆரம்பத்திலிருந்தே, இயேசுவின் போதனைகளை பெண்கள் கேட்டு, அவருக்கு கீழ்படிந்தார்கள். லாசருவின் சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் பெத்தானியாவில் இருக்கும் தங்கள் வீட்டை இயேசு தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளும் அன்பான வீடாக மாற்றியிருந்தார்கள். சமுதாயத்தில் இருந்த அனைத்துமட்ட பெண்கள், இயேசு நன்மை செய்பவராகவும், நல்ல நண்பாராகவும் இருப்பதைக் கண்டார்கள். இவர்கள் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களோடு சேர்ந்து எப்போதும் இயேசுவின் ஊழிய பாதையில் ஒரு பட்டணத்திலிருந்து இன்னொரு பட்டணத்திற்குச் அவரோடு சென்றார்கள். இவர்களில் மேரி மகதலேனா என்ற பெண் கூட இருந்தார், இப்பெண் தன் தீய வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பியிருந்தார்(லூக்கா 8:2). இதர பெண்கள் யார் என்றால், கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், மற்றும் சூசன்னாளும் அவர்களுடைய ஆஸ்திகளால் இயேசுவின் ஊழியத்தின் தேவைகளை சந்தித்தார்கள்(லூக்கா 8:3). இவர்கள் மட்டுமன்றி, தங்கள் தீய நடத்தைகளால் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட பெண்களையும் இயேசு அங்கீகரித்து, அவர்களிடமிருந்து கூட பெண் இனத்தில் காணப்படும் நல்ல குணங்களை வெளிக்கொணர்ந்து கிறிஸ்த பக்தி மார்க்கத்தில் வளர இயேசு உதவி புரிந்தார்(லூக்கா 7:37-50). தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் இயேசுவினால் ஆசீர்வதிக்கபடுவதை கண்டு இரசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்(மாற்கு 10:13-16). அதே போல தங்கள் மரித்த பிள்ளைகளை அவர் உயிரோடு எழுப்பும் காட்சியை கண்டும் ஆனந்தித்தார்கள்(லூக்கா 7:12-15). இயேசுவின் கடைசிப் பயணமான கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குச் சென்ற பயணத்திலும் பெண்கள் அவரோடு வந்தார்கள், மற்றும் கலவாரிக்குச் சென்ற அந்த வழியிலும் கூட பெண்கள் அவருக்கு ஊழியம் செய்தார்கள்(மத்தேயு 27:55, மத்தேயு 27:56).
பெண்கள் அவரது சிலுவையறையப்படுதலைக் கண்டு அவருக்கு சாட்சிகளானார்கள்(லூக்கா 23:49), கல்லரையில் வைக்க அவரது உடலை கொண்டு போனபோது கூட பெண்கள் சென்றார்கள்(மத்தேயு 27:61, லூக்கா 23:55); அவரது உடலில் பூசுவதற்கு நறுமனங்களை தயார் செய்து கொண்டுவந்தார்கள்(லூக்கா 23:56); அவர் உயிர்த்தெழுந்த நாளில் அவரது கல்லரைக்கு முதலில் சென்றவர்களும் பெண்கள் தான்(மத்தேயு 28:1, மாற்கு 16:1, லூக்கா 24:1, யோவான் 20:1); இயேசு உயிர்த்தெழுந்து முதன் முதலில் காணப்பட்டது பெண்களுக்குத் தான்(மத்தேயு 28:9, மாற்கு 16:9, யோவான் 20:14). இப்படி விசுவாசிகளான பக்தியுள்ள பெண்களில் மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள்(மத்தேயு 27:56), யோவன்னாளும், மற்றும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஸ்திரியும் இருந்தார்(லூக்கா 24:10). தெரிந்துக்கொள்ளப்பட்ட சீடர்களுக்கு இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைச் சொல்லும் பாக்கியத்தைப் பெற்றவர்களும் பெண்கள் தான்(லூக்கா 24:9, லூக்கா 24:10, லூக்கா 24:22).
இப்பெண்களில் இயேசுவின் தாயும் அடங்குவார்கள். மற்றும் மேலறையில் எல்லாரோடும் சேர்ந்து ஜெபத்தில் தரித்திருந்து, பெந்தேகோஸ்தோ அனுபவத்தைப் பெற்ற 120 பேர்களில் இயேசுவின் தாயும் ஒருவராவார்(அப் 1:14); முதன் முதலில் கிறிஸ்தவத்தை தழுவியவர்களில் பெண்களும் இருக்கிறார்கள்(அப் 8:12); ஆரம்ப திருச்சபை கஷ்டங்களில், பாடுகளில் பெண்கள் பங்கு பெற்றார்கள்(அப் 9:2). புதிய விசுவாத்தை எதிர்த்த யூத எதிரிகள் பல கனம்பொருந்திய பெண்களின் உதவியுடன் பவலையும் பர்னபாசையும் துன்பப்படுத்தினார்கள்(அப் 13:50); அதே நேரத்தில் கிரேக்கரான கனம்பொருந்திய பெண்கள் கிறிஸ்தவ விசுவாசிகளாகி நற்குணசாலிகளாக இருந்தார்கள்(அப் 17:12). இயேசுவின் மூன்று வருட ஊழியத்திலும், சிலுவையின் அடியிலும், கல்லரையில் வைக்கப்படுதலிலும், பெண்கள் தங்கள் உண்மையை நேர்மையை நிருபித்தார்கள், இதுவே இவர்களின் பக்தியை வெளிப்படுத்தின...1
மேலே சொல்லப்பட்ட பெண்கள் பற்றிய செயல் விவரங்களை ஒருவர் காணும்போது, பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தை காணமுடியும். அவர்களுக்கு சுயமாக முடிவு எடுக்கும் சுதந்திரம், தங்கள் மதசெயல்பாடுகளில் ஈடுபடும் சுதந்திரம் இருப்பதை காணமுடியும். இவைகளில் எந்த இடத்திலும் பெண்கள் மீது கணவன்மார்கள் அதிகாரம் செலுத்தியதாக காணமுடியாது.
கிறிஸ்தவ நம்பிக்கையில் பிறப்பு, அழகு மற்றும் இனம் போன்றவைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவரை விட மேலானவர் என்று எண்ணுவதற்கு இடமில்லை. நாம் அனைவரும் நம் குறைகளை ஒப்புக்கொண்ட பாவிகள் தாம். நாம் அனைவரும் இயேசுவின் கிருபையினால் காப்பாற்றப்பட்டுள்ளோம் (இரட்சிக்கப்பட்டுள்ளோம்). ஒரு மனிதனுக்கு கிறிஸ்துவில் கிடைக்கும் அதே உரிமையே மற்றவர்களுக்கும் கிடைக்கும். உலகத்தில் பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்களாகவே கருதப்படுகிறார்கள். இயேசுவின் நற்செய்தி என்னவென்றால், கிறிஸ்துவிற்குள் எல்லாரும் சமம் மற்றும் ஒருவருக்கு கிடைக்கும் அதே உரிமையை மற்றவர்களும் அனுபவிக்கலாம் என்பதேயாகும்.
பெண்களை ஆபசமாக்கி அவர்களை துன்புறுத்துவதை கிறிஸ்தவ நம்பிக்கை ஒருபோதும் அனுமதிக்காது. தேவன் ஆணையும் பெண்ணையும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வண்ணமாகவே படைத்தார். ஒரு கணவன் தன் மனைவியுடன் தாம்பத்தியம் நடத்தமாட்டேன் என்றுச் சொல்லி, நிரந்தரமாக அவளுக்கு தேவையான தாம்பத்திய உறவு சந்தோஷத்தை கொடுக்காமல் இருப்பது, எதற்கு சமம் என்றால், "நம்மைப் படைத்த இறைவனிடம், இறைவா நீ ஒரு பெரிய தவறு செய்தாய், நான் அதை திருத்திக்கொண்டு இருக்கிறேன்" என்றுச் சொல்வதற்கு சமமாகும். பெண்களுக்கு தங்கள் கணவர்களை தெரிந்தெடுக்கும் உரிமையை தரவேண்டும், இப்படிப்பட்ட உரிமை மத்திய கிழக்கு நாடுகளில் சில நேரங்களில் மறுக்கப்படுகிறது. ஈசாக்கின் திருமண வேலையாக ஆபிகாமின் முன்னோர்களின் நாட்டிற்கு ஆபிரகாமின் ஊழியக்காரர் சென்று பெண் கேட்கிறார், இதனை ஆதியாகமம் 24:57-58 இவ்விதமாகச் சொல்கிறது "அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்"(ஆதி 24:57-58). இந்த உரிமை தான் இன்றும் கிறிஸ்தவத்தில் நிலைத்திருக்கிறது.
பைபிளின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்"(எபே 5:20-21) என்று அறிவுரை கூறப்படுகிறார்கள். கிறிஸ்துவிற்கும் அவரது சபைக்கும்(சர்ச்) இடையேயுள்ள உறவை, ஒரு கணவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையேயுள்ள உறவுமுறையோடு ஒப்பிடப்படுகிறது. "ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்"(எபே 5:24-28).
கிறிஸ்து எப்படி தன் சபையை நேசித்து தன்னைத்தானே கொடுத்தாரோ அது போல கணவர்கள் தங்கள் மனைவிகளை நேசித்து தங்களைத் தாங்களே கொடுக்கவேண்டும். இந்த வரிகள் தான் பெண்களை கவுரவிக்கும் வரிகள், அவர்களை சந்தோஷப்படுத்தும் வரிகளாகும், அன்புடனும் பொறுமையுடனும் அவர்களை நேசிக்கச்சொல்லும் வரிகளாகும். மனைவிகளை கொடுமைப்படுத்துவதற்கும், அடிப்பதற்கும், அவ்வளவு ஏன், தங்கள் சொந்த மனைவிகளை கற்பழிப்பதற்கும் எந்த ஆதாரமும் அதிகாரமும் கிறிஸ்தவத்தில் இல்லை.
முடிவுரையாக, தேவன் உங்களை நேசிப்பது என்பது மிகவும் ஆச்சரியமானது, மற்றும் இந்த உணர்வு உங்கள் இருதயத்திற்கு மகிழ்ச்சியைத் தரும். மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் அடிக்கடி காணும் வார்த்தையாகும். பிலிப்பு சபைக்கு பவுல் கீழ் கண்டவிதமாக நியாபகப்படுத்துகிறார் "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலிப்பியர் 4:4). இயேசுவை நீங்கள் சந்தித்தால், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும், மற்றும் அவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும் அறிவீர்கள்.
பின்குறிப்பு:
1 The International Standard Bible Encyclopedia, 1929 Edition, available online from E-Sword. This quotation is taken from the entry "Women".
English Source: http://www.answering-islam.org/authors/roark/christ_offers_muslims.html
1 The International Standard Bible Encyclopedia, 1929 Edition, available online from E-Sword. This quotation is taken from the entry "Women".
English Source: http://www.answering-islam.org/authors/roark/christ_offers_muslims.html
Subscribe to:
Post Comments (Atom)
No Response to "ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்? - What Does Christ Offer to a Muslim?"
Post a Comment